சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது. அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நாடு முழுவதும் 259 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, தேர்வு வாரியத்தின் நடைமுறைகள் குறித்து முழுமையான ஆய்வு மதிப்பீடு செய்ய வேண்டியிருப்பதால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகளால் ஏற்பட்ட பெரும் பரபரப்பே நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நாளை காலை, மதியம் என இரண்டு ஷிஃப்ட்களாக நடைபெறும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது.
ஆனால், தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த 4 விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல் 750 கிமீ முதல் 1,000 கிமீ தொலைவில் ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர், விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறை ஜே.பி.நட்டா மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தை தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக தேர்வர்களில் 75 சதவீதத்தினருக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்தது. அதேநேரம், 25 சதவீத தேர்வர்களுக்கு 1,000 கிமீ தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டப்படி நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து, முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.