மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஓரளவு உயர்ந்து முடிந்தன.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்ந்த நிலையில், இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் அதிகபட்சமாக 82,784.75 புள்ளிகளும் அதே வேளையில் குறைந்தபட்சமாக 82,342.94 புள்ளிகளை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 63.57 புள்ளிகள் உயர்ந்து 82,634.48 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 16.25 புள்ளிகள் உயர்ந்து 25,212.05 ஆக நிலைபெற்றது.
துறைகளில் உலோக குறியீடு 0.6 சதவிகிதமும், மருந்து குறியீடு 0.3 சதவிகிதம் சரிந்தது. அதே நேரத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா குறியீடுகள் 0.5 முதல் 1.8 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் எடர்னல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.