திருச்சூர்: கேரளத்தில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனனை கேரள திருச்சூர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனன் (63). இவர் தான் நடத்தி வரும் இரு நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டியுடன் அசல் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார். இதை நம்பி ஏராளமானோர் இவரது இரு நிறுவனங்களில் ரூ. 7.78 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தனர்.
எனினும் அவர், முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு முன்வைப்புத் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 62 பேர் திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சுந்தர் சி மேனன் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ. 7.78 கோடி பணம் பெற்றிருப்பதும், முதிர்வு காலம் முடிவடைந்தும் முதலீட்டாளர்களுக்கு தொகையைத் திருப்பி வழங்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சுந்தர் சி மேனன், அந்த நிறுவனங்களைச் சேர்ந்த பிற இயக்குநர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
தொழிலதிபர் சுந்தர் சி மேனனுக்கு 2016 இல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருந்தது. அத்துடன் இவர், புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.