மதுரை: ராஜபாளையத்தில் நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து, அவரது சீடர்களை வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்த தியான பீட அறங்காவலர் சந்திரசேகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் கோதைநாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மருத்துவர் கணேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நித்யானந்தா ஆசிரமங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த ஆசிரமங்களில் தங்கியுள்ள பெண் சீடர்களை வெளியேற்றுமாறு கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள பெண் சீடர்களை வெளியேற்ற ராஜபாளையம் டிஎஸ்பி நடவடிக்கை எடுத்து வருகிறார். கோட்டாட்சியர் உத்தரவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆசிரமங்களில் இருந்து யாரையும் வெளியேற்றக்கூடாது.
எனவே, நித்யானந்தாவின் சீடர்களை ஆசிரமங்களில் இருந்து வெளியேற்றும் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கௌரி, நித்யானந்தாவின் ஆசிரமங்களிலிருந்து, அவரது சீடர்களை வெளியேற்றுவது தொடர்பாக கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.