நினைவுச் சுவடுகள்: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் – சைக்கிள் பேரணி! | The political story on bicycle rallies

Spread the love

மக்களின் ஆர்வம்

ஒரு சைக்கிள் பேரணி பொதுவாகத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கும். கட்சி அமைப்பாளர்கள் மாணவர்கள், இளைஞர் அணியினர், உள்ளூர் செயற்பாட்டாளர்கள்… எனத் தொண்டர்களை ஒன்று சேர்ப்பார்கள். அவர்களின் சைக்கிள்களின் முன்புறம் உள்ள கைப்பிடிகளில் கட்சி சின்னம் பொறித்த கொடிகள் பறக்கும். ஒரே மாதிரியான தொப்பி அல்லது துண்டுகளை அணிந்து தொண்டர்கள் சைக்கிள்களில் அணி வகுப்பார்கள். 

பேரணிக்கான பாதைகள் முன்கூட்டியே திட்டமிடப்படும். வார்டு எல்லைகள், கிராமக் குழுக்கள், சந்தைப் பகுதிகள், முக்கியமான பொது இடங்கள் ஆகியவை குறிக்கப்படும். மக்கள் அதிகம் வெளியில் நடமாடும் நேரமான காலை அல்லது மாலை வேளைகளில் பேரணி தொடங்கும்.

ஒரே சீரான ஓசையில் சைக்கிளை மிதித்துக்கொண்டுச் செல்லும் அந்தப் பிரசாரக் குழுவினர், தொகுதி முழுவதும் சுற்றி வருவார்கள். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மெதுவாகச் சென்று, முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். சைக்கிளை மிதிக்கும் ஒலி , அதற்கிடையே எழும் முழக்கங்கள் போன்ற அனைத்தும் அந்தப் பிரசாரத்தின் இசையாகவே மாறும்.

நகரப் பகுதிகளில், குறுகிய சாலைகளில் செல்லும் சைக்கிள் பேரணிகள் சில நேரங்களில் தற்காலிகமாக போக்குவரத்தையே முடக்கிவிடும். இதனால் கடைக்காரர்கள், வழிப்போக்கர்கள் கவனத்தை ஈர்க்கும். முழுமையான ஆதரவு கிடைக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது குறைந்தபட்சம் ஆர்வத்தையாவது மக்களிடையே உருவாக்கும்.

மக்களுடன் நேரடித் தொடர்பு

தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியில் இருந்த அல்லது தான் சார்ந்த கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட மூத்த தலைமுறையினருக்கு, சைக்கிள் பேரணிகள் என்பது இன்னும் மறக்க முடியாத தேர்தல் நினைவுகளாகவே உள்ளன. இளம் வயதில், அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில், வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் வயல்வெளிகள், மண் சாலைகள் வழியாக சைக்கிளை மிதித்து பிரசாரம் செய்த நாட்களை பலரும் நினைவு கூறுவார்கள். அவர்களுக்கு அந்தச் சைக்கிள் பேரணிகள், தோழமை உணர்வையும் ஒரு கடமை செய்த திருப்தியையும் தந்த அனுபவமாக இருந்தது.

இந்த நினைவுகள், அரசியல் அனுபவம் கொண்ட மூத்தவர்கள், கட்சித் தொண்டர்கள், சாதாரண வாக்காளர்கள் ஆகியோரின் வாய்மொழி கதைகளிலும் பேட்டிகளிலும் இன்றும் இடம் பெறுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, ஜீப் போன்ற திறந்த வாகனங்களில் வந்து பிரசாரம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் சைக்கிளில் வந்த இளைஞர்கள்தான் ஒவ்வொரு தெருக்களிலும் வந்து பேசினார்கள். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டு முன்பாகவும் நின்று பேசுவது அன்றைய பிரசாரத்தின் தனிச்சிறப்பாக இருந்தது.

இன்றைய பெரிய வாகன பேரணிகளில் மக்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், பழைய சைக்கிள் பேரணிகள் உரையாடலுக்கான இடத்தை உருவாக்கின. சைக்கிளில் வந்த ஒரு தொண்டர் நின்று பேசலாம், கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம், நேரடித் தொடர்பை உருவாக்கலாம். அந்த மனிதத் தொடர்புதான், பல வாக்காளர்களின் மனதில் ஆழமான நினைவாக பதிந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *