1967 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. இந்தத் தேர்தல், மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, திராவிட அரசியல் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. அதாவது அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர வழிவகுத்தது.
இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், கருத்தியல் அடிப்படையுடனும் அமைந்திருந்தது. பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டனர். மொழி உரிமை, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு, சமூக நீதி என பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த திமுக தலைவர்களின் உரைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார சுமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து மக்களிடையே உருவான அதிருப்தி, இந்தப் பிரசாரங்களில் தெளிவாக வெளிப்பட்டது.
மேலும், மக்களைக் கவரக்கூடிய வகையிலான எளிமையான கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முழக்கங்கள், திமுகவின் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்திய தேர்தலாகவும் இது அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே நிரந்தரமாக மாற்றி, பிராந்திய அடையாளத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கின.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின. கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன.
அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான திமுக, 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே திமுக பக்கம் சென்றது.
கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன.
“கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’,
‘பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’,
‘காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சி?’,
‘கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள்.