நினைவுச் சுவடுகள் 04: அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்! | tamilnadu-election-campaign-through-tea-shops-and-partiy’s-newspaper

Spread the love

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற அரங்குகள் அல்லது தேர்தல் மேடைகளுக்குள் மட்டுமே இருந்ததில்லை. பல ஆண்டுகளாக அது டீ கடைகளிலும் உயிர்ப்புடன் இருந்தது. சிறிய தெருமுனைகளில் இருக்கும் அந்த டீ கடைகளில், கிணிங் கிணிங் எனச் சத்தமிடும் கண்ணாடி டம்ளர்களின் ஓசையுடன் செய்தித்தாள்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவரின் கைகளுக்குச் செல்லும். சமயங்களில் ஒரே பக்கத்தை இரண்டு அல்லது மூன்று பேர்கூடச் சேர்ந்து படிப்பது உண்டு. அதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசியல் விவாதங்களில், குவளையில் ஆற்றப்படும் டீயைப் போலவே சூடு பறக்கும். 

இந்த டீ கடைகளுடன் சேர்ந்து, செய்தித்தாள்களும் கட்சி சார்ந்த பத்திரிகைகளும் சாதாரண மக்களுக்கு அதிகாரம், அரசியல் கொள்கைகள், தலைமை என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தன. இவை அனைத்தும் இணைந்து, மக்களின் கருத்துகளையும் கட்சிகளின் அடிப்படை ஆதரவு வலையையும் உருவாக்கிய ஒரு அமைதியான, ஆனால் வலிமையான அரசியல் சூழலை உருவாக்கின.

1950-களில் இருந்து 1980-களின் இறுதிவரை, தமிழ்நாட்டில் டீ கடைகள் மக்கள் தங்களின் அரசியலைப் பேசும் மிக எளிய பொது இடங்களாக இருந்தன. கட்சி கூட்டங்கள் அல்லது தேர்தல் மேடைகள் போல அழைப்போ, உறுப்பினர் அடையாளமோ இங்கே தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்; பேசலாம்; எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது மற்றவர்கள் பேசுவதை அல்லது விவாதிப்பதை அமைதியாகக் கேட்கலாம். இந்தத் திறந்த தன்மையே, டீ கடைகளை ஒரு தனித்துவமான ஜனநாயக வெளியாக மாற்றியது.

காலையில் வீடுகளில்  தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு. படிக்கத் தெரிந்த ஒருவர், அரசியலில் ஆர்வம் கொண்ட ஒருவர், செய்திகளைச் சத்தமாக வாசிப்பார். மற்றவர்கள் கேட்பார்கள்; இடைமறிப்பார்கள்; கேள்வி எழுப்புவார்கள்; வாதம் செய்வார்கள்.

அந்த வகையில், இங்கே செய்தி வெறும் தகவலாக  மட்டுமல்லாது, விவாதமாகவும் பகுப்பாய்வாகவும் மாறியது. இந்த உரையாடல்கள் சிறியதாகத் தோன்றினாலும், அவை தலைவர்கள், அரசுகள், கொள்கைகள் பற்றிய மக்களின் பார்வையை உருவாக்கின. பல கிராமங்களிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளிலும், ஒருவரின் அரசியல் அடையாளம் உருவான இடம் டீ கடைகளே என்றால், அது மிகையில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *