இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது குடும்பமும் தங்கள் பாதுகாப்பு குறித்தும், குல்தீப் சிங் செங்கரின் ஆள்களால் தொடரும் அச்சுறுத்தல் குறித்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அந்தக் கடிதம் நீதிபதிக்குச் சென்று சேரவில்லை.
இந்தச் சூழலில், ஜூலை 28, 2019 அன்று உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரிலிருந்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி, தன் சித்திகள் இருவருடனும், வழக்கறிஞருடனும் ரேபேராலி சிறைக்கு வாக்குமூலம் கொடுக்கப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கார் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில், அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியது. லாரி ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு, தப்பி ஓடினார்.

உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் வழக்கறிஞரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டனர். காரில் பயணித்த அவரது இரண்டு சித்திகளும், விபத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த இருவரும் உடனடியாக, லக்னோ கே.ஜி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், அவரது உடலின் வலது பக்கத்தின் பல எலும்புகள் முறிந்திருந்திருந்தது.