நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி காலாவதி ஆகிவிட்டது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் | Funds allocated for Neutrino project lapsed: Central Govt informs in High Court

1298150.jpg
Spread the love

மதுரை: நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2015-ல் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில், நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தேனி பகுதியில் நிலவளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கும் பேரழிவு ஏற்படும்.

விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கும் ஆபத்து நேரிடும். எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.இந்த மனு 2015-ல் விசாரணைக்கு வந்தபோது, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த விசாரணையின் போது நியூட்ரினோ திட்டம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், “நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது. திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இதனால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,” எனக் கேட்கப்பட்டது. இதையேற்று விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *