சேலம்: கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆனைமடுவு, கரியகோயில் மனைகளில் இருந்து, உபரிநீர் திறக்கப்படும் என்பதால் வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அடுத்த புழுதிகுட்டையில், ஆனை மடுவு அணையும், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோயில் அணையும் உள்ளன. இந்த இரு அணைகளும், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையினால் , சில வாரங்களுக்கு முன்னரே நிரம்பிவிட்டன. எனவே, அணைகளுக்கு வந்து கொண்டிருக்கும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் இன்று 65.35 அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 336 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், கரியகோயில் அணையின் நீர்மட்டம் இன்று 50.52 அடியாக இருந்து. அணையிலிருந்து விநாடிக்கு 342 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஆனைமடுவு, கரிய கோவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில், இவ்விரு அணைகளில் இருந்தும் எந்த நேரத்திலும் அதிகளவு நீர் ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று என்று நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆனைமடுவு ஆறு , கரிய கோவில் ஆறு மற்றும் வசிஷ்ட நதி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.