நிர்மலா சீதாராமன் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பார்வையிட போசியா கூட்டமைப்பினர் வலியுறுத்தல் | Nirmala Sitharaman urged to visit MSME at coimbatore

1307793.jpg
Spread the love

கோவை: கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு தொழில்முனைவோருடன் கலந்துரையாட வேண்டும் என, ‘போசியா’ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) ஆலோசனை கூட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.

‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நடராஜ், ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் தொழில் வரி, குப்பை வரி செலுத்த வலியுறுத்துகின்றனர். ஏற்கெனவே குறு, சிறு தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தொழில்துறையினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துகிறது. கோவை மாநகராட்சி ஆணையர், குறு சிறு தொழில் முனைவோர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து வரி விதிப்பு முறைப்படுத்தவும் தொழில்துறையினருக்கு அதிகாரிகள் அளித்து வரும் நெருக்கடியில் இருந்து பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஒரு மாதமாக குறுந்தொழில் முனைவோர் தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாடு குறித்து கணக்கெடுக்கும் போது, பயன்படுத்தும் கட்டணத்துக்கு இணையாக அபராத தொகை வசூல் செய்து வருகின்றனர். மின்வாரியத்தின் இந்நடவடிக்கை அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. மின்கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வால் தவித்து வரும் தொழில்துறையினருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய தலைமை பொறியாளர் கோவை தொழில் அமைப்புகளை அழைத்து பேசி அபராத விதிப்பு தவிர்த்து தொழில்துறையினருக்கு உதவும் வகையில் உரிய வழி காட்ட வேண்டும்.

செப்டம்பர் 11-ம் தேதி கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு சிறு தொழில் நிறுவனங்களை பார்வையிட வேண்டும். ஜாப் ஆர்டர்கள் செய்யும் தொழில்முனைவோரை நேரடியாக சந்தித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி கடன் பெறும் தொழில்முனைவோர் தொடர்ச்சியாக தொழில் நெருக்கடியால் 90 நாட்கள் கடனுக்கான தவணை தொகை கட்ட தவறினால், ‘சர்பாஸ்’ சட்டத்தை பயன்படுத்தி சொத்துக்களை பறிமுதல் செய்வது, தொழில்களை முடக்குவது உள்ளிட்ட கடும் நடவடிக்கையை வங்கி நிர்வாகங்கள் மேற்கொள்கின்றன. இச்சட்டத்தின்கீழ் முன்பு இருந்ததை போல் 180 நாட்களாக மாற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி்க்கைகள் வலியுறுத்தப்பட்டன.கோவை குறு, சிறு பவுண்டரி தொழில்முனைவோர் சங்கம்(காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முக குமார், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளிவேல், கிரில் தயாளிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகி சாகுல் ஹமீது, எம்எம்எம்இ தொழில் அமைப்பின் நிர்வாகி மணி உள்ளிட்ட ‘போசியா’ கூட்டமைப்பில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *