நிறைவேற்றப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss raised many questions to tn govt

1354161.jpg
Spread the love

விழுப்புரம்: பட்ஜெட் அறிவிப்புகளில் செயல்படுத்தப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச்.13) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசு 4 பட்ஜெட்களை வெளியிட்டுள்ளது. திமுக அரசு நாளை மறுநாள் 15-ம் தேதி இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை வெளியிட உள்ளது. எராளமான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

தடுப்பணைகள் கட்டப்படவில்லை. புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளால் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொன்னது எதுவும் நடக்கவில்லை. இந்த அரசு, அறிவிப்புகளை வெளியிடும் அரசாகவே உள்ளது. இதில் செயல்படுத்தப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சத்தீஸ்கரில் ரூ.3120, ஒடிசாவில் ரூ.3100 என்ற வரிசையில் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை ரூ 3500 ஆக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு உயர்த்தவில்லை. சுவாமிநாதன் கமிஷன் கூறியதுபோல குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3450 கொள்முதல் விலை வழங்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 உயர்த்தி ரூ.3320 வழங்க வேண்டும்.

சென்னையில் 22-ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்துக்கு 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக துணை முதல்வரை தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். கர்நாடக அரசின் நிதி நிலை அறிக்கையில் மேகேதாட்டு அணை கட்ட ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைக்கக்கூடாது என்று 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டேன். ஆனால் கர்நாடகாவை அழைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 உயர்த்தி இருப்பது வரவேற்கதக்கது. தமிழகத்தில் ரூ.2.25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் தற்போது ரூ.1.16 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது ஏற்கதக்கதல்ல. தமிழகத்தில் இத்தொகையை ரூ 2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள்கூட அமைக்கப்படவில்லை. 1990 வரை அமைக்கப்பட்ட காற்றாலைகள் சேதமடைதுவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் 2-ம் இடத்துக்கும், சூரிய ஒளி மின் உற்பத்தியில் 3-ம் இடத்துக்கும் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

நியாயவிலைக்கடைகள் மூலம் சோதனை அடிப்படையில் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு தேவையான அளவு கொள்முதல் செய்யாததால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியது, தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது குறித்த புத்தகங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொடுக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

தொடர்ந்து அவர், “அன்புமணி ராஜ்யசபா பதவி குறித்த கேள்வியை திமுகவிடம் வைக்கமாட்டோம். யாரிடம் வைக்கலாம் என நீங்களே சொல்லுங்கள். ” என்றார். பேட்டியின்போது தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *