புதுதில்லி: இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பியிருப்பதைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.
11-வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், நிலக்கரி இறக்குமதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றார்.
நடப்பு நிதியாண்டில் 1,080 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி இலக்கு எட்டப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க: பாஸ்போர்ட் சேவை மையங்களை 600ஆக அதிகரிக்கப்படும்!
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நாம் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை, 113 நிலக்கரி சுரங்கங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இன்று 11வது சுற்று வணிக நிலக்கரி சுரங்கங்களின் ஏல செயல்முறை தொடங்கியுள்ளது.
பதினோராவது சுற்றில் விற்பனைக்கு வந்துள்ள 27 நிலக்கரி தொகுதிகள் ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு ரூ.1,446 கோடி வருவாய் ஈட்டுவதுடன், சுமார் 19,000 பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும்.