நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு | Rs 5 crore relief for landslide-affected Kerala: Tamil Nadu government announcement

1287696.jpg
Spread the love

சென்னை: வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயனிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (30-7-2024) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழகத்தில் இருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ்ப்அதிகாரிகளான கீ.சு.சமீரன், மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவுக்குப் புறப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு: முன்னதாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 54 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *