இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆக.12, 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை விசாரித்தது. ஏடிஆர் சாா்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகின்ற ஆக.9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நேற்று(ஆக. 9) உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரதாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதியில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.