நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!

Dinamani2f2024 042f0413f317 4fca 4fd8 8efb 84d9ebbc64fb2fdoctors Tnie.jpg
Spread the love

இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 11) நிறைவு பெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.7-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ வாய்ப்பு வழங்கியது. அதன்படி மாணவா்கள் இணையதளம் வழியாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *