கோடையில் வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் நாம், வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏ.சி வாங்குகிறோம்.
அப்படி வாங்கும் ஏசியை கோடை காலத்தில் எப்படி பயன்படுத்துவது, நீண்ட காலமாக பயன்படுத்தாமல் தீடீரென இயக்கும் போது ஏற்படும் விளைவுகள்,தொழில்நுட்ப ஆலோசனைகள் பற்றி தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் கணேசன் வழிகாட்டுகிறார்.
“ஏசியை நிறுவும்போது உங்கள் பகுதியில் மின்னழுத்த மாறுபாடுகள் அடிக்கடி இருக்கிறதா என்று பார்த்து, அதற்குத் தகுந்த நிலைப்படுத்தி தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அவுட்டோர் யூனிட் வைக்கத் தகுந்த இடம் இருக்கிறதா என்பதையும், உங்கள் அறையில் சீலிங் செய்திருந்தால் அதற்கு ஏற்றவாறு எப்படிப் பொருத்த வேண்டும் என்பதையும் டெக்னீசியன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. காப்பர் பைப் எக்ஸ்டென்ஷன் தேவைப்படுமா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
விபத்துக்கான காரணங்கள்
நீண்ட நாட்களாக சர்வீஸ் செய்யாமல் இருப்பது, பொருத்தமான இடத்தில் நிருவாதது, தூசி அடைப்பு முக்கிய காரணமாக அமைகிறது. குளிரூட்டும் வாயுக்கள் சில எரி தன்மை கொண்டதாக இருப்பதால் அருகிலுள்ள சாதனங்களில் மின்கசிவு ஏற்படுவதை உடனே கண்டறிய வேண்டும். ஏசி அறையில் அடிக்கடி புகைப் பிடிப்பது, தீப்பெட்டி பயன்படுத்துவதும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.
மிக முக்கியமானது பராமரிப்பு..!
பராமரிப்பு என்பது ஏசிக்கு மிக மிக அவசியமான ஒன்று. நாம் எப்படி ஒரு இருசக்கர வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்கிறோமோ, அதேபோல் ஏசியையும் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை முறையான பொதுப் பராமரிப்பு செய்ய வேண்டும்.
அப்போதுதான் எரிவாயு அளவு சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க முடியும். நீண்ட நாட்கள் வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பினால், உள்ளே ஒட்டடைகள் இருக்க வாய்ப்புள்ளதால், முதலில் ஏசியைச் சிறிது நேரம் காலியாக ஓடவிட்டுப் பின்னர் அறையை மூடிப் பயன்படுத்தவும். ஏசியின் ஆயுள் நீடிக்க வேண்டுமானால் தினமும் ஒரு மணி நேரமாவது அதை இயக்குவது நல்லது.”