சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்புதான். இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைகளை, சிபிஐக்குமாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது, இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் சரியானவையே என்ற அர்த்தத்தில் நிகழ்ந்துள்ளதாக கருதலாம். இந்த வழக்கில் 3 பேர் போலியாக மனு தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினோம். மோசடியாக ஒரு தீர்ப்பை பெற்ற பிறகு, அது மோசடி என்று தெரியவந்தால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்துவிடும்.
‘எங்களுக்கு தெரியாமலேயே வழக்கறிஞர் மனு தாக்கல்செய்துள்ளார்’ என்று நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மோசடியாகப் பெறப்பட்டது என்று தெரிந்தால், நீதிமன்றம் அதை விலக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறைக்கு அனுப்பப்படலாம். தீர்ப்பும் ரத்தாகும். விஜய் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, சிபிஐ விசாரணையை வெற்றி என்று கொண்டாடுகிறார்.
அவர்கள் மனுவில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அவர்களின் வழக்கறிஞர்களும் சிபிஐ விசாரணை வேண்டாம் என்றுதான் வாதாடினார்கள். மிக முக்கியமாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, தமிழக அரசு அழுத்தம் போட்டு வாங்கியது என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்றம் அனுமதி அளித்ததன்படி, நாங்கள் எதிர்மனு தாக்கல் செய்தோம். மோசடியாகப் பெறப்பட்ட தீர்ப்புகள் குறித்து நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.