நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் – நீதிபதி அதிருப்தி | 550 contempt cases filed in 2 months by officials who did not comply with court orders – Judge dissatisfied

1353212.jpg
Spread the love

மதுரை: நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வருவாய்த் துறை முதன்மை செயலாளர் அமுதாவிடம் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றியவர் செல்வநாயகம். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி செல்வநாயகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். பணப்பலன்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வநாயகம் மனு தாக்கல் செய்தார்.

இந்த அவமதிப்பு மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தான் காரணம்” என்றார்.இதையடுத்து நீதிபதி, கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன.

இது நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதை காட்டுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அளவிலான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 3 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக, கல்வித் துறையில் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. இது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா கடந்த 2023-ல் நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை போல், தலைமை செயலாளர் உத்தரவையும் அதிகாரிகள் மதிப்பதில்லை. உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தான். இருப்பினும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்ற முடிவுடன் அதிகாரிகள் உள்ளனர். இந்தப் போக்கு நல்லதல்ல என்றார். பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *