நாட்டில் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக ஒழுத்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”பாரதிய ஜனதா பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கத்தைச் சேற்ந்தவர்களும், சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது.
பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
7 மாநிலங்களைச் சேர்ந்த 13 தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, ஆம் ஆத்மி -1, திமுக -1) 2 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.