சென்னை: தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக காற்றில் பறக்கவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தண்ணீர் வறட்சியாலும், வெள்ளை ஈ தாக்குதலாலும், வாடல் நோயாலும் தமிழக தென்னை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், திமுக அரசோ தென்னை விவசாயத்தை காப்பாற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விநியோகித்து தென்னை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கக்கூட முன்வரவில்லை.
மேலும், 2021 தேர்தலின்போது தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, நீரா பானம் போன்ற மதிப்புக் கூட்டல் பொருட்களுக்கான நடவடிக்கைகள், கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் ஆகியவற்றையும் கிடப்பில் போட்டு தேங்காய் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது. எனவே, திமுக அரசை விரைவில் விவசாயிகள் விரட்டியடிப்பார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.