'நீர்தேக்கத் தொட்டியை இடித்தபோது, வீட்டில் இடிந்து விழுந்து விபத்து' – கரூர் அதிர்ச்சி சம்பவம்

Spread the love

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்தி கிராமம், அமர்ஜோதி மூன்றாவது தெருவில் அதிக கொள்ளளவு கொண்ட நீண்ட காலமாக பயனற்று கிடந்த நீர்த்தேக்கத் தொட்டியை நீக்கிவிட்டு, அங்கு அரசு சார்பாக புதிய கட்டடம் கட்ட முடிவு செய்தனர். அதன்படி, அப்பகுதியில் நேற்று காலை முதல் நீர் தேக்கத் தொட்டியை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்படி, நேற்று மாலை நேரத்தில் நீர் தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்ட நிலையில், நீர்த்தேக்கத் தொட்டி அருகே இருந்த மீரா விஜயகுமார் என்பவரின் வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் நீர்த்தேக்கத் தொட்டி சாய்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீர் தேக்கத் தொட்டி
நீர் தேக்கத் தொட்டி

இந்த தகவலறிந்து வந்த வீட்டின் உரிமையாளர் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்துவது குறித்து அருகில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும், நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றும்போது தகுந்த பாதுகாப்புடன் அகற்றியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதோடு, வீட்டில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல லட்சம் ருபாய் செலவாகும் என தெரிவித்ததோடு, இந்த சேதம் குறித்து அப்பகுதி கவுன்சிலரிடம் முறையிட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும், இல்லை என்றால் வழக்குப் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அரசு கட்டடங்கள் இடிக்கும்போது தகுந்த பாதுகாப்புடன் இடித்து வரும் நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் இடித்ததால்தான் இந்த விபத்து நடந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிக்கும்போது அருகிலிருந்த வீட்டில் சாய்ந்து வீடு சேதமடைந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

house damaged

இந்நிலையில், மாநகராட்சியின் அனுமதி எதுவுமின்றி இப்பணி நடைபெற்றது தெரிய வந்துள்ளதால், காவல்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சுதா தெரிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்தபோது அருகில் இருந்த வீட்டின்மீது விழுந்து அந்த வீடு சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *