நீலகிரி கனமழை பாதிப்பு: ராட்சத மரம் விழுந்து காவல் நிலையம் சேதம் | giant tree fell and damaged the police station in nilgiris

1285584.jpg
Spread the love

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வறண்டிருந்த அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது.

காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அடுத்தடுத்து சரியும் ராட்சத மரங்களால் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று, மழையின் தீவிரம் குறையாத நிலையில், மரங்களாலும் மண்சரிவாலும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத கற்பூர மரம் நேற்று விழுந்தது. இதில் காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்தது. மேலும், மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. மழை பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் கூறும் போது, ‘‘எதிர்பாராத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

மழையால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர், மக்களவை உறுப்பினர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். மீட்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன’’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *