நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 4 districts including Nilgiris and Coimbatore today

1370141
Spread the love

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 21) சில இடங்களிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று, நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 10 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., வேலூர் மாவட்டம் காட்பாடி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *