நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy rains in 6 districts including Nilgiris Theni today imd weather report

Spread the love

சென்னை: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நகரக் கூடும்.

மகாராஷ்டிரா – கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 25) முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களிலும், வரும் 27-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, சோலையாறு, வால்பாறை ஆகிய இடங்களில் 7 செ.மீ., கோவை மாவட்டம் உபாசி, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் 6 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *