மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டவிடாரின் மகன் மார்க் டவிடார், அந்த இளம் யானைக்கு `ரிவால்டோ’ என்று பெயரிட்டார்.
நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு ‘செல்லப்பிள்ளையாக மாறியது. 2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. அதன் உற்ற நண்பனான மார்க் டவிடார் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது.

அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கையின் நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், அது காட்டை விட்டு விலகவில்லை. தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை.