உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 24) மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது. அதி கன மழை, சூறாவளி காற்று என மாவட்டத்தையே மழை புரட்டிப் போட்டது. வழக்கத்துக்கு மாறான காற்றின் வேகத்தால் மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன. மழை மற்றும் காற்று காரணமாக 97 வீடுகள் பகுதி சேதமும், 4 வீடுகள் முழுமையான சேதமும் அடைந்தன. அதேபோல், 32 இடங்களில் மண் சரிவும், 140 மரங்கள் விழுந்தும் பாதிப்புக்குள்ளானது.
8 இடங்களில் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் மீது சாய்ந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றைச் சீரமைக்கும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, இன்று உதகை நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தின் பல இடங்களில் இரண்டு நாட்களாக சற்றே ஓய்ந்திருந்த மழை இன்று மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
காலை முதலே நகரில் கடுமையான பனி மூட்டத்துடன் மிதமான மழை பெய்துகொண்டே இருந்தது. காற்றின் வேகம் குறைந்திருந்த போதும் குளிர் வாட்டி வதைத்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இன்று காலை வரையிலான நிலவரப்படி அவலாஞ்சியில் அதிகபட்சமாக 81 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: கிளன்மார்கன் – 56, குந்தா – 50, எமரால்டு – 38, நடுவட்டம் – 25, உதகை – 24, அப்பர் பவானி – 21, சேரங்கோடு – 18, தேவாலா – 18, பந்தலூர் – 13, கூடலூர் – 13, செருமுள்ளி – 12, பாடந்தொரை – 11, ஓ வேலி – 11, கோடநாடு – 9, கோத்தகிரி – 1, என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.