தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஸ்ட்ராங் ரூமில் 24 மணி நேர போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டு எப்போதும் கண்காணிக்கப்படுகிறது.
கண்காணிப்பு காமிரா வேலை செய்ய வில்லை
இந்த நிலையில் நீலகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராங் அறையில் உள்ள கண்காணிப்பு காமிரா சுமார் 4 மணிநேரம் செயல்பாட்டில் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தண்ணணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க.பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி ஸ்ட்ராங் அறையில் உள்ள கண்காணிப்பு காமிரா சுமார் 4 மணிநேரம் வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 9-ந்தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுகிறது. விஜயபிரபாகரன் கடந்த ஒரு மாதமாகவே விருதுநகரில் தங்கி இருந்து தனது தேர்தல் வேலைகளை முடித்து உள்ளார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே பள்ளி திறப்பை மேலும் தள்ளிப்போடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெப்பம் மற்றும் காற்றோட்டம்
இதற்கிடையே கண்காணிப்பு காமிரா பழுது விவகாரம் தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
நேற்று மாலை அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டடன.
அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.
பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
கலெக்டரின் இந்த பதில் பேசும் பொருளாக மாறி உள்ளது.