“நீ ஒரு தீவிரவாதி'' – சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?

Spread the love

ஐ.டி ஊழியர், அரசு அதிகாரி, ஓய்வுபெற்றவர் என எந்த வேறுபாடும், பிரிவுகளும் இல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் மோசடிக்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல.

நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி சி.வி.சண்முகத்திற்கு ‘டிஜிட்டல் அரஸ்ட்’ போன்கால் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடருக்காக தற்போது சி.வி.சண்முகம் டெல்லி இருக்கிறார்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

என்ன நடந்தது?

நேற்று காலை 10 மணியளவில், சி.வி.சண்முகத்திற்கு அவருக்கு தெரியாத போன் நம்பரில் இருந்து போன்கால் வந்துள்ளது.

எதிர்முனையில் ஆங்கிலத்தில் பேசிய மோசடி பேர்வழி, மும்பை போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சி.வி.சண்முகத்தை தீவிரவாதி என்றும், அவரை உடனடியாக கைது செய்ய உள்ளதாகவும் பயமுறுத்தி உள்ளனர்.

அடுத்ததாக, ‘சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்’ பேசுவதாக ஒரு நபர் பேசியுள்ளார். அவர் சி.வி சண்முகத்திற்கு எதிராக 17 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மோசடியாளர்களிடம், உண்மையான போலீசார் என்பதற்கான அடையாளத்தைக் கேட்டுள்ளார் சி.வி.சண்முகம். உடனே, அவர்கள் தமிழில் திட்டி, மிரட்டியுள்ளனர்.

இதன் பின், சி.வி.சண்முகத்தின் உதவியாளர் போன்கால் வந்த நம்பரை ட்ரூ காலரில் செக் செய்துள்ளார். அந்த நம்பர் ட்ரூ காலர் ஆப்பில், ‘பி.கே.சி காவல் நிலையம், மும்பை’ என்கிற பெயரில் பதிவாகி உள்ளது.

மீண்டும் அந்த மொபைல் எண்ணுக்கு அழைத்த போது, போன்கால் எடுக்கவில்லை.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

கோரிக்கை

இந்த சம்பவத்தை சி.வி சண்முகம் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாராக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறும்போது, `நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த மாதிரியான சம்பவம் நடக்கும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *