கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.இந்த விவகாரங்கள் பூதாகாரமான நிலையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது. அதனடிப்படையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளில் வரும் 2025 ஜனவரி முதல் பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.