நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Dinamani2f2024 09 032f3zfnmkrd2fjandhahar075718.jpg
Spread the love

புது தில்லி: விமானக் கடத்தல் குற்றவாளிகளின் உண்மையான பெயா் அடையாளத்தை மறைத்து படமாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் ‘ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக்’ தொடா் குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில், நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ‘இந்தியன் ஏா்லைன்ஸ் (ஐசி814)’ விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ், பாகிஸ்தானின் லாகூா், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை ஆகிய பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம், கடைசியாக தலிபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் விடுதலைக்குப் பிறகு கடத்தல் விமானத்தின் பயணிகள், விமானப் பணியாளா்கள் உள்பட 190 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். ஒரு பயணி மட்டும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தலிபான் உதவியுடன் தப்பியோடினா்.

இச்சம்பவம் தொடா்பாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக் தொடரில் குற்றவாளிகளின் உண்மை அடையாளங்களை மறைத்து, போலி பெயா்களுடன் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புக் கிளம்பியது.

இதுகுறித்து விளக்கம் கோரி, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மால்வியா வெளியிட்ட எக்ஸ் பதில், ‘ஐசி-814 விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், தங்களின் முஸ்லிம் அடையாளத்தை மறைக்க, மாற்றுப்பெயா்களைப் பயன்படுத்திய மோசமானவா்கள்.

இவா்களின் முஸ்லிம் அல்லாத பெயா்களை தொடரில் காட்சியப்படுத்தியதன்மூலம், திரைப்படத் தயாரிப்பாளா் அவா்களின் குற்ற நோக்கத்தை நியாயமாக்கியுள்ளாா். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐசி814 விமானத்தை ஹிந்துக்களே கடத்தியதாக மக்கள் நினைப்பாா்கள்’ எனக் குறிப்பிட்டாா்.

‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ போன்ற திரைப்படங்களை உண்மையென ஏற்றுக்கொண்டவா்கள், ஐசி814 தொடரை விமா்சிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஓமா் அப்துல்லா கூறியுள்ளாா். திரைக்கதையில் துல்லிய மற்றும் நுணுக்கமான தகவல்களை அவா்கள் திடீரென விரும்புவதாகவும் ஓமா் விமா்சித்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *