‘நெருக்கடியான சூழல்களில் பெண்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
உலக மகளிர் தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
எனக்கு முன்மாதிரியாக இருந்தது எனது அம்மாதான். எங்கள் குடும்பத்துக்காக மிகக் கடுமையாக அவர் வேலை செய்வார். நான் உறுதியாகச் சொல்கிறேன், ஒரு நெருக்கடியான சூழலில் பெண் எடுக்கும் முடிவுதான் சிறந்ததாக இருக்கும்.
நாம் பெண் கல்வியின் மூலமாக வளர்ச்சியை பேசுகிறோம். ஆனால், கல்லூரிகள், பள்ளிகளில் பெண் கழிப்பறைகளை கட்டுவது குறித்து யோசிப்பதில்லை. பெண்களுக்கு போதுமான கழிவறைகள் இல்லாதபோது அவர்கள் எவ்வாறு படிக்க வருவார்கள். பெண்களின் வளர்ச்சியில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.
இந்த நாடு வளர்ச்சி பெற மக்கள் தொகையில் பாதி அளவு உள்ள பெண்களின் முழுமையான பங்களிப்பு அவசியமாகும். அதற்கு சட்டம் இயற்றும் மற்றும் கொள்கை உருவாக்கும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
அதேபோல், நகரங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு போதுமான விடுதிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எந்த உதவியும் கிடைப்பதில்லை. இதனால் அவர் அந்த வேலையில் இருந்து சில ஆண்டுகளுக்கு விலகியிருக்க வேண்டியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண், தினமும் 6 முதல் 7 மணிநேரம் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலைகளை பகிர்ந்துகொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.