நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா சாப்டர் – 1 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காந்தாராவில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஓரிடத்தில் சுற்றியபடி காணாமல் போகும். அந்த இடத்திலிருந்தே காந்தாரா சாப்டர் – 1 கதை துவங்குகிறது. ஏன் நம் முன்னோர்கள் இந்த இடத்திலேயே மறைகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் காந்தாரா மலைப் பகுதியில் ஈஸ்வர பூந்தோட்டம் என்கிற இடத்தில் ஒரு பழங்குடியின சமூகம் வசித்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மகத்துவத்தை அறிந்த பாந்தோரா மன்னன் ஈஸ்வர தோட்டத்திற்கு படையுடன் சென்று அதனைக் கைப்பற்ற நினைக்கிறான்.
ஆனால், தெய்வ சக்தி மன்னனின் ஆசைகளையும் அவனையும் அழிக்கிறது. மன்னனின் மகன் மட்டும் அங்கிருந்து தப்பிச்செல்கிறார். ஆண்டுகள் கடக்கின்றன. மீண்டும் ஈஸ்வர பூந்தோட்டத்தின் மீது மன்னர் குடும்பத்துக்கு ஆசை எழுகிறது. அவர்கள் அமானுஷ்யங்கள் நிறைந்த காந்தாரா காட்டிற்குள் சென்றார்களா? ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைந்தார்களா? என்கிற கதையைப் புராண நம்பிக்கைகள் மூலம் சொல்லியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
நம்முடைய புராணக் கதைகளுக்கென நீண்ட செவிவழிக் கதைகள் உள்ளன. ஆழம் செல்ல, செல்ல ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் பண்பாடுகளுடன் கூடிய மத நம்பிக்கைகள், வழிபாட்டு நெறிகள், நெருப்பின் மீதான அச்சம் என காந்தாரா சாப்டர்- 1 கதை மிக கவனமாக எழுதப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்க்கையைக் குருட்டுத்தனமாக முன்வைக்காமல் ரிஷப் ஷெட்டி தொன்மக் கதையை நவீன சினிமா மொழிக்கு அசாதாரணமாகக் கடத்தியிருக்கிறார்.
காந்தாராவில் நிலவுரிமை பேசப்பட்டதுபோல் காந்தாரா சாப்டர் – 1 இல் நிலத்தின் ஆன்மா யாரிடம் இருந்தது என்பதைப் பேசியிருக்கிறார். பூமியில் அநியாயம் நடக்கும்போதெல்லாம் தெய்வம் மனித உருவெடுக்கும் என்கிற கதையில் தெய்வத்தையும் வீழ்த்தும் தருணங்களும் எழுதபட்டிருக்கிறது.
திரைக்கதையில் ஒவ்வொரு இரவிலும் இப்படத்தின் கதைக்கான அடுத்தக்கட்ட பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இரவும் நெருப்பும் பழங்குடியினரின் வாழ்வில் மிக முக்கியமானது. இந்த இரண்டையும் படிமம்போல் காந்தாரா உலகிற்குள் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார் ரிஷப். அவர்களின் இறை வேண்டுதலை துளு மொழியிலேயே பேச வைத்தது நல்ல முடிவு. அதன் வசன உச்சரிப்பே கதையில் தெய்வம் இருக்கிறது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்குகிறது.
படத்தின் முதல்பாதி மலையையும் மக்களையும் காட்டி அந்த உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதாவது காட்டிற்குள் செல்லும் நிதானத்துடன். நல்ல இடைவேளைக் காட்சியிலிருந்து இரண்டாம் பாகம் பரபரப்பாகச் செல்ல இறுதி 20 நிமிடங்கள் ரிஷப்பின் நடிப்புடன் ஒளிப்பதிவு, இசை, விஎஃப்எக்ஸ் ஆகியவை உயிர்பெற்று ‘திரைத் தீப்பிடிக்கும்’ அளவிற்கு ருத்ர தாண்டவமே நடக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கிளைமேக்ஸ்தான் காரணமாக இருக்கும்.