திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய உணவு துறை துணை இயக்குநர் ராஜ்கிஷோர் சஹி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் தமிழகத்தில் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து விட்டது. எனவே நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 மத்தியக்குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பி உள்ளது. காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழு 2 நாட்களாக ஆய்வுப் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ய திருச்சிக்கு வந்து தனியார் ஓட்டலில் தங்கியிருந்த 2 குழுக்கள் நேற்று முன்தினம் திடீரென நாமக்கல், கோவை பகுதியில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய சென்றனர். அக்குழுவினர் அக்.26 வரை ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவு துறை துணை இயக்குநர் ராஜ்கிஷோர் சஹி (ஆர்.கே.சஹி) தலைமையிலான குழுவினர் இன்று திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள், ‘மழையால் அறுவடைப் பணிகள் தாமதமாகி வருகிறது. அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. எனவே நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
மாந்துரையைச் சேர்ந்த விவசாயி பீட்டர் பவுல்ராஜ் கூறுகையில், “லால்குடி வட்டம் முழுவதும் மழையால் வயல்கள் அனைத்தும் மூழ்கி உள்ளன. தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. நான் மைக்கேல்பட்டியில் 5 ஏக்கர் நெல் பயிரிட்டேன். மழையால் அறுவை பணிகள் பாதித்தது. இதனால் ஏக்கருக்கு 5 மூட்டை நெல் மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. ஏக்கருக்கு 60 மூட்டை நெல் கிடைத்த நிலையில் தற்போது 5 மூட்டை மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம். எனவே ஈரப்பதத்தை அதிகரித்துத்தருவதோடு, மத்திய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதைக்கேட்டுக் கொண்ட ஆய்வுக்குழுவினர் விவசாயிகளின் நெல் மாதிரிகள், கொள்முதல் நெல் மாதிரிகளை சேகரித்தனர். கருவிகள் கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதித்தனர். தொடர்ந்து நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் குழுவினர் ஆய்வு செய்தபோது, அங்கு போதிய இடவசதி இல்லை. கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் நெல் அளவிடும் பணிகள் தாமதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து ஆய்வுக் குழுவினர் பூவாளூர், கோமகுடி, கொப்பாவளி ஆகிய திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின்போது, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல மேலாளர் குமரவேல், வட்டாட்சியர் ஞானாமிர்தம் ஆகியோர் உடனிருந்தனர்.