பாஜகவில் தனிமனித துதிகளுக்கு வேலை இருக்காது என்பார்கள். ஆனால், அதையும் தாண்டி அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கி இருக்கும் அவரது விசுவாசிகள், அதை தமிழகம் முழுவதும் கிளை பரப்பவும் தயாராகி வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பவர்கள் நடப்பு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லைச் சீமைக்காரர்கள் என்பது தான் பல்வேறு ஊகங்களை உலவவிட்டிருக்கிறது.
அதிமுகவுடன் தாங்கள் மீண்டும் கூட்டணி அமைக்க சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காகவே அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கிய பாஜக தலைமை, அந்த இடத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரான நயினார் நாகேந்திரனை உட்கார வைத்தது. இதன் மூலம் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமர்க்களமாக அமைந்துவிட்டாலும், கட்சிக்குள் ‘அண்ணாமலை ஆர்மி’க்கும் நயினார் நலன் விரும்பிகளுக்குமான மோதல்கள் முன்னைவிட வேகமெடுத்தன. இதனால், அண்ணாமலையையும் நயினாரையும் பாஜக மேடைகளில் ஒருசேர பார்ப்பதே இப்போது அரிதாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லையில் நடந்த பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அந்த மாநாட்டில் அண்ணாமலையின் பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் அவரது ஆதரவாளர்கள் அரங்கை அதிரவைத்து நயினார் தரப்பை உசுப்பேற்றினர். இதனைத் தொடந்து மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலையின் பெயரைச் சொன்னாலே கரவொலிகள் காதைக் கிழித்தன.
இந்த நிலையில், திருநெல்வேலியை மையமாக கொண்டு அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கி இருப்பது ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்த பிறகும் அதன் வீச்சு இன்னும் அடங்கவில்லை. நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகத்தை திறக்கவும் அதன் கிளைகளை தமிழகம் முழுமைக்கும் விரிவுபடுத்தவும் அவரது விசுவாசிகள் திட்டம் வகுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தைத் தொடங்கிய பாஜக ஆன்மிகப் பிரிவு முன்னாள் நிர்வாகியான நெல்லை ச. வேல்கண்ணனிடம் பேசினோம். “இதில் அரசியல் ஏதுமில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கி, அதை முறையாக பதிவு செய்து, கொடியையும் அறிமுகம் செய்துள்ளோம். நாங்கள் மன்றம் தொடங்கப் போவது அண்ணாமலைக்கே தெரியாது. அவர் மீது எங்களுக்குள்ள ஈர்ப்பால் நற்பணி மன்றத்தை தொடங்கினோம். இதெல்லாம் வேண்டாம் என்று அவர் சொன்னாலும் இதுபற்றி நாங்கள் அவரிடம் நேரில் விளக்கவுள்ளோம்.
நயினார் நாகேந்திரனை பின்னுக்குத் தள்ளும் வேலையாக இதை பார்க்க வேண்டியதில்லை. காரணம், நற்பணி மன்றத்தில் உள்ளவர்கள் அனைவருமே பாஜகவினர். நாங்கள் அனைவரும் பாஜகவில் பணியாற்றி வருகிறோம். கட்சி வேறு, நற்பணி மன்றம் வேறு. மன்றத்தின் கிளைகளை தொடங்க விரும்புவதாக விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் எங்களை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
விரைவில் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகத்தை திருநெல்வேலியில் திறக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த விழாவுக்கு நயினார் நாகேந்திரனையும் அண்ணாமலையையும் அழைக்க இருக்கிறோம்” என்றார் அவர். மன்றம் தொடங்கியதில் அரசியல் ஏதும் இல்லை என்றால் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் ஒன்றாகவே வந்து அண்ணாமலை மன்றத்தின் தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கட்டுமே!