சென்னை: நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. திருவையாறு தொகுதியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்கத்தை முன்வைத்து திருநெல்வேலி மாவட்டம், கூத்தன் குழியில், கட்சியின் மீனவர் பாசறை சார்பில் ‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார்.
ஆடு-மாடு, மரங்களின் மாடு, மலைகளின் மாநாடு போன்றவற்றை போல் இந்த மாநாடும் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்படுகிறது. கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இம்மாநாடு, சீமானின் மற்ற மாநாடுகளைப் போல, சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகே வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.