சபாநாயகர் மு.அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் ஆ.பிரபாகரன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான மு.அப்துல்வகாபின் மகன் முசாம்பில் என நெல்லை திமுக-வில் வாரிசுத் தலைவர்கள் வரிசை கட்டும் நிலையில், பாஜக தலைவரும், எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியும் இப்போது இந்தப் பட்டியலுக்குள் வந்திருக்கிறார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த அலெக்ஸ் அப்பாவு, அண்மையில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது ராதாபுரம் தொகுதிக்காக மகனைத் தயார்படுத்தும் அப்பாவு, உட்கட்சி எதிரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் அலெக்ஸை இறக்கிவிட்டு ஆழம் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு முன்னதாகவே தனது மகன் பிரபாகரனை கட்சியினருக்கு பரிச்சயமாக்கிவிட்டார் ஆவுடையப்பன்.
தனது அம்பாசமுத்திரம் தொகுதியை இம்முறை மகனுக்கு தாரைவார்க்க ஆவுடையப்பன் தயாராகிவிட்டாராம். இதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் தொகுதி முழுக்க முதல்வர், துணை முதல்வரை வாழ்த்தியும், மறுபடியும் வாய்ப்புக் கேட்டும் பிரபாகரன் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். இவர்களுக்கு மத்தியில் தனது மகன் முசாம்பிலை துணை முதல்வர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்தி வருகிறார் அப்துல்வகாப்.
அதுபோல், தனது மகன் பாலாஜியை முன்னிலைப்படுத்தும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு அமைப்பாளர் பொறுப்பையும் அண்மையில் மகனுக்குப் பெற்றுக் கொடுத்தார். பாலாஜியின் திடீர் அரசியல் ஆக்டிவிட்டிகளை பட்டியல் போடும் நெல்லை பாஜககாரர்கள், “இம்முறை நெல்லை தொகுதியில் பாலாஜி போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறார்கள்.