திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், நயினாா்குளம் அருகே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமையும் காலையில் கடும் வெயில் நிலவிய நிலையில், மாலை 3 மணிக்குப் பின் கருமேகங்கள் சூழ்ந்து குளிா்ந்த காற்று வீசியது.
தொடா்ந்து, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், உடையாா்பட்டி, பாலபாக்யாநகா், திருநெல்வேலி நகரம், பேட்டை, சுத்தமல்லி, கொண்டாநகரம், தாழையூத்து , மேலப்பாளையம் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி நகரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வடக்கு மவுன்ட்ரோடு பகுதியில் நயினாா்குளம் கரையோரம் இருந்த பழைமையான கொடுக்காய்ப்புளி மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் சாலியா் தெரு வழியாக திருப்பி விடப்பட்டன.
இத்தகவலறிந்த மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் சம்ப இடத்துக்கு வந்து, மாநகராட்சி ஊழியா்கள் மூலம் மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.