திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர், பேட்டை பகுதியை சேர்ந்த மாயாண்டி ஆகிய 2 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். அதேநேரத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடுக்கல்லூர் உள்ளிட்ட 4 இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை கழிவுகள்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள், ரத்த மாதிரிகள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உட்பட 10 பேர் கொண்ட கேரள அரசின் அதிகாரிகள் குழுவினர் திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களும் மருத்துவ கழிவுகளின் மாதிரிகளையும், அங்கு கொட்டப்பட்டிருந்த ஆவணங்களையும் சேகரித்தனர். இது குறித்து முறைப்படி கேரள அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.