மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணவேணி, இவர்களின் மகன் சுர்ஜித் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணன், சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சம்பவம் நடைபெற்றபோது ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான் ஜூன் 30 முதல் 98 நாட்களாக சிறையில் உள்ளேன். கவின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி கே.முரளி சங்கர் இன்று விசாரித்து, மனு தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி, கவின் தாயார் தமிழ்செல்வி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.17-க்கு தள்ளிவைத்தார்.