நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் – கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

Spread the love

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் – ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த கார் முழுமையாக எரிந்த நிலையில் கிடந்தது. பனை மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் எரிந்து கிடந்த காருக்குள் நான்கு பேரின் ஊடல்கள் கிடந்தன.

காட்டுப்பகுதியில் கிடந்த அந்த காருக்குள் எரிந்து கிடந்த நான்கு உடல்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகளின் உடல்கள் கருகிய நிலையில் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தக் குழந்தைகள் பெண்ணின் உடலைக் கட்டிப்பிடித்த நிலையில் இருந்ததால், கார் எரியும்போது குழந்தைகள் தாயைக் கட்டிப் பிடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் விசாரணையை முடுக்கி விட்டார். அத்துடன், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன. காரில் இறந்து கிடப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அவர்கள் கடன் தொல்லை காரானமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து காருடன் எரித்து விட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, “இந்த கார் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை ஆற்றங்கரை பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு வந்தவர்களா என்பதைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கேரளாவில் இருந்து அந்த கார் வந்திருகலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விரைவில் இந்தச் சம்பவத்தின் பின்னணி தெரியவரும்” என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *