‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் | 4 arrested so far in the murder that took place outside the Nellai court: Minister Ragupathi

1344040.jpg
Spread the love

சென்னை: “நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வரும்வழியில், நீதிமன்றத்துக்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர். கடந்த அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் வாழ்வாதார உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தை, மறுநாள் காலையில் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கோடநாடு கொலை சம்பவம் என பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழலில் தமிழகம் தவித்துக்கிடந்ததை மறந்துவிட்டீர்களா பழனிசாமி? மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் பல்கிப்பெருகிக் கிடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அதன்படி 2020-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 8,91,700 ஆகும். 2022-ம் ஆண்டில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 1,93,913 என குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை பார்க்கும் போதே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒருவருக்கு மட்டும் புரியவே புரியாது அவர் தான் பழனிசாமி.

“நகரம் பற்றி எரியும் போது அக்கறையின்றி பிடில் வாசித்து ஆனந்தப்பட்ட நீரோ மன்னனாய்” ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு தற்போது மக்கள் நலன் பேணும் தமிழக முதல்வர் தலைமையிலான திராவிடமாடல் ஆட்சியைக் கண்டு பொறாமையும் வயிற்றெரிச்சலும் வருவது இயல்பு தான். எதிர்க்கட்சித் தலைவரே கவனம், பொறாமை மன நலத்தை கெடுக்கும், வயிற்றெரிச்சல் உடல்நலத்தை கெடுக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “எங்கும் கொலை; எதிலும் கொலை” என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு, சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை, சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து என செய்திகள் வந்துள்ளன.

“தனிப்பட்ட கொலைகள்” என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் ஸ்டாலினின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *