நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக கரடிகள் வனப்பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறி பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி விடுகின்றன.
இரவு நேரங்களில் வீடு, கடை, கோயில்களுக்குள் புகுந்து பிடித்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷத்தில் அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன.
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.