நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த 20ம் தேதி திருநெல்வேலி, கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் காதலியுடன் சாப்பிட சென்றார்.
வெட்டிக்கொலை
பின்னர் தீபக்ராஜா ஓட்டலில் இருந்து வெளியே காரை எடுக்க வந்தபோது 6 பேர் கும்பலால் ஓட்டல் முன்பு ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கைதுசெய்யும் வைர தீபக்ராஜாவின் உடலை வாங்கப்போவதில்லை என்று அவரது குடும் பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே தீபக்ராஜா கொலை தொடர்பாக ஏற்கனவே 5 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.20 லட்சம் கூலிக்காக கொலை செய்ததாக தெரிவித்தனர்.
கூலிப்படை
இந்த கொலையில் திருநெல்வேலியை சேர்ந்த நவீன் என்பவர் முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவருடன் முருகன் உள்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பது தெரிந்தது.
போலீசார் பிடிக்க சென்ற போது தப்பி ஓட முயன்றதில் நவீன், முருகன் ஆகியோரது கை,காலில் முறிவு ஏற்பட்டது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலையில் இன்னும் கொலை செய்ய தூண்டியது யார் என்பது குறித்து போலீசார் இன்னும் எதுவும் தெரிவிக்க வில்லை. முன்பகை காரணமாக ஜாதிமோதல் பின்னணியில் தீபக்காராஜா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் சரண் அடைந்த குற்றவாளிகளும், கைது செய்யப்பட்டவர்களும் கொலைக்கான முக்கிய காரணம் என்ன, யார் கொலை செய்ய பணம் கொடுத்தது என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்களை தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை இந்த கொலையில் 8 பேர் பிடிப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
துப்பு கொடுத்தது யார்
தீபக்ராஜா கொலை செய்யப்பட்ட போது 6 பேர் கும்பல் ஈடுபட்டாலும் அந்த பகுதியில் சுமார் 10&க்கும் மேற்பட்ட கூட்டாளிகள் நின்று உள்ளனர். தீபக்ராஜா தப்பி வந்தால் அவரை தீர்த்து கட்டநன்கு திட்டமிட்டு காரியத்தை முடித்து உள்ளனர்.
எப்போதும் கூட்டாளிகள் பாதுகாப்புடன் வலம் வரும் தீபக்ராஜா கொலையுண்ட நாளில் திருமணம் செய்யப்போகும் காதலியை பார்ப்பதற்கு சட்டக்கல்லூரிக்கு சென்று சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் அங்கு காத்திருந்து பின்னர் மதியம் சாப்பாட்டிற்கு ஓட்டலுக்கு அழைத்து சென்று உள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் தீபக்ராஜா அங்கு வந்திருப்பது கொலை கும்பலுக்கு தகவல் தெரிந்து உள்ளது. எனவே இந்த தகவல் எப்படி எதிர்தரப்பினருக்கு சென்றது என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்று உடல் அடக்கம்
இதற்கிடையே கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிக்கி உள்ளதால் தீபக்ராஜாவின் உடலை வாங்கி அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போலீசாரிடம் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இன்று (27ந்தேதி) காலை தீபக்ராஜாவின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சொந்த ஊரான வாகைக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை தீபக்ராஜாவின் ஆதரவாளர்கள் ஏராமானோர் நெல்லையில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.