நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவிப்பு | BJP protest has announced that the police are trying to suppress the Nellai Booth Committee conference

1373717
Spread the love

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டபோது, பதாகைகளை வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால், பதாகைகள் வைக்க போலீஸார் அனுமதி மறுப்பதாகவும், அனுமதி கேட்க சென்ற நிர்வாகிகளை காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்து, மாநகர காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துபலவேசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநாடு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திருநெல்வேலி மாநகர காவல்துணை ஆணையர் பிரசன்ன குமாரை கண்டித்து வண்ணார்பேட்டையில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாஜக சார்பில் 22-ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலின்படி விளம்பர பதாகைகளை அமைக்க மாநகர காவல்துறை சார்பில் மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால். பாஜக சார்பில் உண்மைக்கு மாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாமல் மாநகரம் முழுக்க பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறிபதாகைகளை வைக்க அனுமதி கோரினர்.

நீதிமன்ற உத்தரவுப்படியும், சட்ட விதிகளின்படியும் பதாகைகளை வைக்கவும், விதிமுறைகளை மீறி பதாகைகளை வைக்க அனுமதி அளிக்க இயலாது என்றும், அவ்வாறு பதாகைகளை வைத்தால் அவை அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை திசைதிருப்பும் வகையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *