நெல்லை மேயர் வேட்பாளராக 25 ஆவது வார்டு உறுப்பினரான ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி. எம். சரவணன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது.
இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் தேர்தலை நடத்துவதற்கு அறிவுறுத்தலை வழங்கியது. மாநகராட்சி ஆணையரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.
அதன்படி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5 ) காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை திமுக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே. என். நேரு உள்ளிட்டோர் தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக 25 ஆவது வார்டு உறுப்பினரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை மேடையில் வைத்து அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.