மதுரை மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. நல்லாசிரியர் விருது பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரான இவர், தேசிய தடகள பயிற்றுநராகவும் இருந்து வந்துள்ளார்.
இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலம், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பிரான்சேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டையின் தேவைக்காக மூன்றரை ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது.
அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.30 லட்சம் தருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்தப் பணத்தைப் பெறுவதற்கு செல்லதுரை விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், விண்ணப்பத்தில் இருக்கும் பெயரும், நிலப் பட்டாவில் உள்ள பெயரும் மாறுபட்டிருப்பதாகக் கூறி நிலத்துக்கான பணத்தைத் தர முடியாது என அதிகாரிகள் கூறினார்களாம்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செல்லதுரை, ஆட்சியர் அலுவலக வாயிலில் திடீரென்று தலைகீழாக நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார். தலைகீழாக நின்றபடியே தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை உடனடியாக நேராக நிறுத்தி விசாரணை நடத்தினர்.