சென்னை: நெல் கொள்முதலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தஞ்சை, திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, செல்லும் வழியெங்கும் முளைத்த நெற்களாக காட்சியளித்தன.
லோடு மேன்களிடம் விசாரித்தபோது, நாளொன்றுக்கு 800 முதல் 900 மூட்டை வரை கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர். ஆனால் சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி, 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்வதாக கூறுகிறார். மேலும், செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி வரவில்லை என்கிறார், ஆனால் ஆகஸ்ட் 18-ம் தேதியே அனுமதி வந்துவிட்டது.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மூட்டை நெல் தேங்கி இருக்கிறது. சுமார் 30 லட்சம் மூட்டைக்கு மேல், கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய முடியாமல் இருக்கிறது. கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் சென்றால் தான் மேற்கொண்டு கொள்முதல் செய்ய முடியும்.
இந்த இரண்டு வேலையும் நடக்கவில்லை. இதனால் 1 லட்சம் ஏக்கரில் அறுவடை ஆகாமல் இருக்கிறது, அறுவடை செய்து கொட்டிவைக்க வழியில்லை என்பதால் வயலிலே விட்டுவிட்டனர். அந்த நெல் மழையில் கீழே படிந்து முளைத்துவிட்டது, கொள்முதலுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசிடம் தளர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை.
அதிமுகவின் 10 ஆண்டு காலத்தில் நெல் கொள்முதலில் இப்படியான குளறுபடிகள் இருந்ததில்லை. நான் ஒன்பதரை ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். எல்லா பணிகளையும் முன்கூட்டியே முடிப்போம். ஆனால் திமுக அரசு நெல் கொள்முதலுக்கு எந்த வித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.
தமிழகத்தில் 1972 முதல் 2011 வரை 12 லட்சம் டன் கொள்ளவு கொண்ட குடோன்கள் தான் இருந்தன. அதன் பிறகு 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மட்டும் கூடுதலாக 12 லட்சம் டன் கொள்ளளவை அதிகரித்து, நாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறும்போது 24 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் இருந்தன. இப்போது திமுக அமைச்சர்கள் நாங்கள் கிடங்குகள் கட்டிவிட்டோம் என்று, திறந்தவெளி கிடங்குகளை சேர்த்து சொல்கிறார்கள்.
விவசாயிகள் பிரச்சினை என்பதால் பழனிசாமி களத்துக்கு வருகிறார், அதை திமுக அரசால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் நெல் கொள்முதலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.