செங்கல்பட்டு: நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்த 3 மத்தியக் குழுவில், ஒரு குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது ஆய்வுப் பணியை நேற்று தொடங்கியது. மற்ற குழுதங்களது பணிகளை இன்று அந்தந்த மாவட்டங்களில் தொடங் குவார்கள் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஆய்வுப் பணிகளைமேற்கொள்வதற்காக மத்திய உணவு துறையின் உயர் அதிகாரிகள் தலைமையில் தலா 3 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி முதல் குழு நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதில் உணவு பாதுகாப்புத் துறை உதவி இயக்குநர் ப்ரீத்தி தலைமையில் 2 தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் திருக்கழுகுன்றம் வட்டம் கீரப்பாக்கம், திருப்போரூர் வட்டம் ஒரகடம், மதுராந்தகம் வட்டம் படாளம் மற்றும் எல்.என்.புரம், செங்கை வட்டம் வில்லியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா முன்னிலையில் ஆய்வு செய்தனர். இதில் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர்.இந்த ஆய்வின்போது வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.