கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை என நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டு விடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை. தமிழகத்தில் விளைவித்த நெல்லை விடுத்து ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் அரிசி, வெல்லம் வாங்குகின்றனர். ஒரு நாள் பட்டினி கிடந்து இறந்தால் தான் அனைத்தும் தெரியும்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பது அவரின் விருப்பம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது அப்போதைய அரசு பொறுப்பேற்றதா, அல்லது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம், அரசு பணி அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதா. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தான் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கல்வி, மருத்துவம், தண்ணீர் ஆகிய மூன்றும் என்று விற்பனைக்கு வந்ததோ சந்தை பண்டமாக மாற்றப்பட்டதோ அது நாடல்ல சுடுகாடு. ‘சிப்காட்’ தொழிற்சாலைகள் அமைத்த பகுதிகளில் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அரசே கூறுகிறது. ஆனால் மீண்டும் அதற்காக நிலத்தை அரசுதான் பறித்து தொழிற்சாலை கட்டுகிறது.
பிறக்கும் குழந்தை புற்றுநோயுடன் பிறப்பதற்கு தண்ணீர், உணவு, சுவாசிக்கும் காற்று ஆகியவை நஞ்சானது தான் காரணம். அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தண்ணீர் மாநாடு நடத்த உள்ளேன். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்து விட்டால் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும்.
பிறகு அனைத்தும் பாஜக வாக்குகளாக மாறிவிடும். கோவையில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகள் கூட வட இந்தியர்களின் வாக்குகள் தான். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் வாக்குகளை திமுக-வினர் தான் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் கூறுவது, திமுக-வினரிடம் இருந்து தான் நாட்டையே பாதுகாக்க வேண்டியுள்ளது” இவ்வாறு சீமான் தெரிவித்தார்.